16/02/2025
Woodlands Hotel- Krishna Rao History:
வெங்கடராமய்யருக்கு ஜார்ஜ் டவுனின் ஆசாரப்பன் தெருவில் இன்னொரு சிறிய ஹோட்டல் இருந்தது. இதை சரியாக பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் அங்கு வியாபாரம் சற்று டல்லடித்தது. எனவே இந்த ஹோட்டலை 700 ரூபாய்க்கு கிருஷ்ணா ராவிற்கு விற்க வெங்கடராமய்யர் முன்வந்தார். அதையும் 50 ரூபாய் மாதம் என்கிற மாதத் தவணையில் செலுத்தினால் போதும் என்றார்.
மாதம் 20 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா ராவ், மாதம் 50 ரூபாய் தவணை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முதலாளி ஆனார். அந்த சிறிய ஹோட்டலில் முதலாளி, சர்வர், சரக்கு மாஸ்டர் எல்லாம் கிருஷ்ணா தான். அவரது அயராத உழைப்பிற்கு பலன் கிடைத்தது. வியாபாரம் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது. அடுத்ததாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த மவுண்ட் ரோடுக்கு மாறுவது என கிருஷ்ணா முடிவெடுத்தார். 1926-ல் ஒருவரோடு கூட்டு சேர்ந்து சென்னை மவுண்ட் ரோடில் உடுப்பி ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார். சென்னையின் முதல் நவீன சைவ உணவகமான உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் உதயமானது. மாதம் நூற்று அறுபது ரூபாய் வாடகை. அதிலும் நல்ல வியாபாரம். பிறகு 1933இல் கூட்டாளிகள் பிரிந்தபோது, கிருஷ்ணா ராவ் உடுப்பி ஹோட்டலையும், கூட்டாளிகள் ஸ்ரீ கிருஷ்ண விலாஸையும் வைத்துக் கொண்டனர். ஏழு வருடங்கள் கழித்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் அவருக்கே மீண்டும் கிடைத்தது. இதனிடையே அடுத்த கட்டத்திற்கு நகர நினைத்த கிருஷ்ணா, பயணிகள் விடுதி ஒன்றைத் தொடங்குவது என முடிவு செய்தார். அந்த சமயத்தில் ராயப்பேட்டையில் ராமநாதபுரம் ராஜா ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதிக்கு சொந்தமான பங்களா ஒன்றை முனிவெங்கடப்பா என்பவர் வாங்கி இருந்தார். அதை ஹோட்டலாக மாற்ற நினைத்த வெங்கடப்பா, அந்த கட்டடத்தை ஐந்நூறு ரூபாய் வாடகையில் கிருஷ்ணா ராவிற்கு 10 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தார்.
1938-ல், இப்படி தொடங்கப்பட்டது தான் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்டல். மரங்கள் சூழ்ந்த கட்டடம் என்பதால் 'உட்லண்ட்ஸ்’ என்று பெயர் வைத்துவிட்டார். 45 அறைகள் கொண்ட ராமநாதபுரம் ராஜாவின் அரண்மனை பயணியர் விடுதியாக மாறியது. இரட்டைக் கட்டில் போடப்பட்ட அறைக்கு ஒரு நாள் வாடகையாக 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகள் முடிந்ததும் வெங்கடப்பா குத்தகையை புதுப்பிக்க மறுத்துவிட்டார். எனவே நகரின் வேறு பகுதியில் இடம் தேடினார் கிருஷ்ணா ராவ். அப்போது மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த ஏ.எம்.எம். முருகப்பா குடும்பத்தின் 4 ஏக்கர் மாளிகை விலைக்கு வந்தது. இதை அந்த காலத்திலேயே 2.5 ரூபாய் லட்சம் கொடுத்து வாங்கினார் கிருஷ்ணா ராவ். ஒரு கல்யாண மண்டபம், அதை அடுத்து ஒரு கோவில், கூட்டங்கள் நடத்த தனி அரங்கு, குடும்பங்கள் தங்குவதற்காக சிறிய காட்டேஜ்கள் என இந்த மாளிகையை தனது எண்ணங்களுக்கு ஏற்ப மாற்றினார்.
ரம்மியமான சூழல், சுத்தமான உணவு, தரமான சேவை போன்ற காரணங்களால் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலை மெட்ராஸ்வாசிகள் இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டனர்.
இதனிடையே மற்ற நாடுகளில் ஹோட்டல்கள் எப்படி இயங்குகின்றன எனத் தெரிந்துகொள்வதற்காக லண்டன், ஜெர்மனி, பாரிஸ், ரோம், நியூயார்க் என ஒரு சுற்றுசுற்றிவிட்டு வந்தார் கிருஷ்ணா. அந்த உலகப் பயணத்தின் பலன்தான், 1962இல் சென்னை வேளாண் விவசாய வாரியத்தின் தோட்டத்தில் விளைந்த சென்னையின் முதல் டிரைவ் இன் ஹோட்டல். பின்னர் நியூயார்க், சிங்கப்பூர் என உலகின் பல இடங்களில் உட்லண்ட்ஸ் ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. இதுதான் கர்நாடக கிராமம் ஒன்றில் கல்லில் மாவாட்டிக் கொண்டிருந்த ஒரு இளைஞனின் கனவுகள், அயராத உழைப்பினால் உயிர்ப்பெற்ற கதை.
நன்றி : திரு . மலைச்சாமி. சிவகாசி.