07/09/2025
பேராசிரியர்கள் ஊன்றிய விதை.
பள்ளிப் பருவதில் எங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்கு நானும் என் தோழிகளும் சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு வருவோம். அதுவே என்னை வாசித்தலுக்குத் தூண்டியது. தமிழ் இலக்கியத்தைப் படித்ததால் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கல்கி, ராஜம் கிருஷ்ணன், வைரமுத்து, சிவகாமி போன்ற பல எழுத்தாளர்களின் நூல்கள் பாடத்திட்டத்தின் வழியே எனக்கு அறிமுகமாயின. என்னுடைய பேராசிரியர்கள் பல எழுத்தாளர்களின் நூல்களைப் பரிந்துரைப்பார்கள். அவற்றை எப்படியாவது தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன்.
என் முனைவர்பட்ட ஆய்வை ஐந்து ஆண்டுகள் மேற்கொண்டேன். அந்நாட்களில் ஒருநாளின் பாதியைப் பல்கலைக்கழக நூலகத்தில்தான் செலவிடுவேன். அப்படித்தான் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாமரன், பிரபஞ்சன், சாருநிவேதிதா, ராஜ்கௌதமன், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன் எனப் பலரது எழுத்துகளையும் வாசிக்கத் தொடங்கினேன்.
ஜெயமோகனின் எழுத்து இன்னும் என் மனதில் அப்படியே ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழின் முதற்பொருளான நிலம், பொழுது இரண்டையும் அடியொற்றியதாகத்தான் அவரின் 'காடு', 'இரவு' ஆகிய இரண்டு நூல்களையும் பார்க்கிறேன். இவரது 'அனல்காற்றும் இமையத்தின் 'எங்கதெ' நாவலும் ஒரே கதைக்கருவாகவும் இரு வேறுபட்ட முடிவுகளாகவும் எனக்குத் தோன்றின.
தினமும் 40 நிமிடங்கள் பேருந்தில் பயணம் செய்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லவேண்டும். அந்தப் பேருந்துப் பயணங்களின்போது படித்து முடித்த நூல்கள்தான், ராஸலீலா, வானம் வசப்படும், துறவாடைக்குள் மறைந்த காதல் மணம், காலச்சுமை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சூடிய பூ சூடற்க போன்றவை.
என்னுடைய தொடர்வாசிப்பில் முக்கியப் பங்கு 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கும் உண்டு. அரசியல் சார்ந்த எழுத்தாளர்களை இந்நாளிதழ் மூலம்தான் அறிந்துகொண்டேன். இன்றும் என்னுடைய ஆகச்சிறந்த பொழுதுபோக்கு வாசிப்புதான். அதனால்தான் நான் பணிபுரியும் கல்லூரியில் மாணவர்களுக்குப் புதிய பல செய்திகளைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்க முடிகிறது.
செ.அம்பிகாபதி, சேலம்
இந்து தமிழ் திசை நாளிதழ்
பெண் இன்று.
07/09/2025